மதுரை: ‘தமிழகத்தில் கொலை, கொள்ளை, சாதி, மத மோதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்க 26 காவல் நிலையங்களில் விசாரணைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி அரியமங்கலத்தை சேரந்தவர்கள் சதீஷ்குமார், சங்கர். இவர்களுக்கு கொலை வழக்கில் திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி 2 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரித்து நீதிபதிகள், கொலை வழக்குகளை சட்டம்- ஒழுங்கு போலீஸாரே விசாரிக்கின்றனர். பணிப்பளு காரணமாக விசாரணையை தொய்வு இல்லாமல் மேற்கொள்ள சட்டம் – ஒழுங்கு போலீஸாரால் முடியவில்லை. இதனால் தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனிப் பிரிவு தொடங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் முதல் கட்டமாக 11 தாலுகா காவல் நிலையங்களில் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் காவல் ஆணையரகத்தில் உள்ள 15 காவல் நிலையங்களிலும் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஆய்வு செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்படும். இப்பிரிவு கொலை, ஆதாய கொலை, வழிப்பறி, கொள்ளை, வெடி குண்டு வழக்குகள், சாதி, மத மோதல் வழக்குகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர் காவல் ஆணையர்கள் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை விரைந்து நிறைவேற்றியதற்காக டிஜிபியை நீதிமன்றம் பாராட்டுகிறது. விசாரணை 2023 பிப். 13-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.