டோடோமா: ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ஏரி ஒன்றில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியாகினர்; பலர் மாயமாகினர்.
தான்சானியாவின் வடமேற்கு நகரமான புகோபாவில் தரையிறங்குவதற்கு சற்று நேரம் முன்பு மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானம் ஒன்று விக்டோரியா ஏரியில் விழுந்தது. இந்த விபத்தில் 19 பேர் பலியானதாக தான்சானியா அரசு தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த இந்த விபத்து குறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “விமானத்தில் 40-க்கும் அதிகமானவர்கள் பயணித்துள்ளனர். இதில் 19 பேர் உயிரிழக்க, 26 பேரை நாங்கள் காப்பாற்றியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக தான்சானியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து தான்சானியா அதிபர் சாமியா கூறும்போது, “விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. இறைவனை வேண்டுங்கள்” என்றார்.
விபத்து குறித்து ஆப்பிரிக்க யூனியன் கமிஷன் தலைவரான மௌசா ஃபக்கி மஹாமத் கூறும்போது, “விக்டோரியா ஏரியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு எங்களது பிரார்த்தனைகள் செல்லட்டும். அரசாங்கம் மற்றும் தான்சானியா மக்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்” என்றார்.
தான்சானியாவில் சமீபத்தில் நடந்த மோசமான விமான விபத்தாகவே இது பார்க்கப்படுகிறது.