“திமுக விஷமத்தனமான பிரசாரத்தை நிறுத்த வேண்டும்; அதிமுக தலைமையில் மெகா கூட்டணி" – அண்ணாமலை

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், இன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

10% இட ஒதுக்கீடு

இந்த நிலையில், சென்னை தியாகராயர் நகரில் ஒரு புத்தக வெளியீட்டில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு வந்தால் இட ஒதுக்கீடு உள்ள மற்ற எல்லோருக்கும் பாதிப்பு என பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு திட்டத்தில் மத்திய அரசு வெவ்வேறு காலகட்டங்களில் யார் யாருக்கு என்னென்ன இட ஒதுக்கீடு வழங்கியதோ அதில் எதுவும் பாதிக்காது, எதுவும் பறி போகாது.

அதேபோல பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் பழங்குடியின மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் உள்ஒதுக்கீடிலும் எந்த மாற்றமும் இருக்காது. அது தனி. ஆனாலும் கூட இதை எதிர்த்து தி.மு.க தொடர்ந்து விஷமத்தனமான பிரசாரத்தை கையில் எடுத்தது. அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில் அவர்களுடைய கருத்துக்களையும் விவாதித்தது. இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு பின்னால் தான் இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அண்ணாமலை

இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்த மதமாக, சாதியாக இருந்தாலும், பொருளாதார அடிப்படையில் சிரமங்களில் இருக்கும் சில நபர்களுக்கு பலன் அளிக்கும். அதற்காகதான் மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. இந்த 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு பெறுவதற்கான சில நிபந்தங்களையும் மத்திய அரசு விதித்திருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய பல சமூகத்தை சார்ந்தவர்கள் பயன் பெறுவார்கள்.

10 சதவிகிதம் என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால் மிகக் குறைவான பகுதிதான். ஆனாலும் அது அவர்களுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும் என பா.ஜ.க நம்புகிறது. அதனால், தி.மு.க விஷமத்தனமான தனது பிரசாரத்தை உடனடியாக நிறுத்தி, தமிழகத்தில் இந்த சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

மெகா கூட்டணி அமைக்கவிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?’ என்கிற கேள்விக்கு, “தமிழகத்தில் தேசிய ஜனநாயக  கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி, எனவே 2024 ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில்  மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தில் தவறில்லை. தேசிய ஐனநாயக  கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது. அதிமுக , பாஜகவினர் ஒரே கூட்டணியில்தான் இருக்கிறோம். குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து இல்லாமல் பாஜகவினர் அனைத்து தொகுதியிலும் வேலை செய்கிறோம். பத்து ஆண்டுக்கு ஒருமுறை தொகுதியின் தன்மை மாறும். எனவே அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேலை செய்து வருகிறது” என்றவரிடம்,

“தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கடிதம் எழுதியிருக்கிறார்களே?” என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது.

“ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற திமுகவின் கருத்து அபத்தமானது, கீழ்த்தரமானது. திமுக கடிதம் எழுதிவிட்டு எல்லா தமிழக எம்.பி-களும் தங்களுக்கு அடிமை என காட்டியுள்ளனர். தமிழகத்திற்கு விரோதமாக ஆளுநர் இருப்பதாக கூறும்  திமுக ஆதாரபூர்வமாக குற்றம்சாட்ட வேண்டும். ஆளுநருக்கு எதிரான மனநிலையில் இருந்து திமுக வெளிவர வேண்டும்” என்றார்.

அண்ணாமலை

`விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிர்ப்பாக ஒரு லட்சம் மனுஸ்மிருதி வழங்கி இருக்கிறாரே…?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “அண்ணன் திருமாவளவனுக்கு  வேலை இல்லாமல் மனுஸ்மிருதியை பிரதி எடுத்து வழங்கி வருகிறார். ஆர்.எஸ்.எஸ் குறித்து அம்பேத்கர் கருத்தை திருமாவளவன் படிக்க வேண்டும். திருமாவளவன் பிரதி எடுத்து  கொடுக்கும்  மனுஸ்மிருதியின் மொழி பெயர்ப்பு தவறானது. ஏதோ மதமாற்றத்திற்காக கிறிஸ்தவ பாதரியார்கள் செய்த அந்த மொழிப் பெயர்ப்பை செலவு செய்து பரப்புவதற்கு பதிலாக அவர்களது கட்சி கொள்கையை துண்டு பிரசுரம் மூலம் வழங்கினால் ஏதும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.