கேரள மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் தொடக்கம் முதலே ஏழாம் பொருத்தமாக உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில், ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது.
இதற்கிடையே, கேரள மாநில அரசு அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக, வரும் 15 ஆம் தேதி, ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக, ஆளும் இடது ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று, கொச்சியில், ஆளுநர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நவம்பர் 15 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டாம். நான், ஆளுநர் மாளிகையில் இருக்கும் போது போராட்டம் நடத்துங்கள். நான் அங்கு வருகிறேன். அப்போது பொது விவாதம் நடத்துவோம்.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை உருவாக்குகிறார்கள். மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள் என சிலர் என்னை மிரட்டுகின்றனர். நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். தைரியம் இருந்தால் ஆளுநர் மாளிகைக்குள் புகுந்து என்னை சாலையில் தாக்குங்கள் என்று நான் அவர்களை வலியுறுத்துவேன்.
அரசியலமைப்பு இயந்திரத்தை சிதைக்கும் வேலைகளில் ஆளும் அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளாவில் உள்ள அனைத்து வேலைகளும் ஆளும் கட்சி காரர்களுக்கு மட்டும் தானா? பல்கலைக்கழக வேலைகள் திருவனந்தபுரத்தில் உள்ள வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தானா? என்று பொது மக்கள் கேட்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.