புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டவிரோத சுரங்க குத்தகை தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றதின் உத்தரவை எதிர்த்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதின்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க குத்தகைகளை சட்டவிரோதமாக முதல்வர் ஹேமந்த் சோரன் தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரணைக்கு உகந்தது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதிகள் ரவீந்தர பட், சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (திங்கள்கிழமை) உத்தரவு பிறப்பித்தது. அதில், சட்டவிரோத சுரங்க குத்தகை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் உத்தரவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஹேமந்த் சோரன், ‘வாய்மையே வெல்லும்’ என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மாநிலத்தில் நடந்த சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என்றும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் தனக்கு வேண்டியவர்களுக்கு குத்தகையை ஒதுக்கீடு செய்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அம்மாநில பாஜக குற்றம்சாட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து சட்டவிரோத சுரங்க குத்தகை ஒதுக்கீடு தொடர்பாக, ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்யலாம் என தேர்தல் ஆணையம், மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. அதேபோல, சமீபத்தில் சுரங்க குத்தகை பணமோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
सत्यमेव जयते! pic.twitter.com/38JLdRLmsq
— Hemant Soren (@HemantSorenJMM) November 7, 2022