பொங்கல் ரேஸிலிருந்து விலகிய பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் – என்னக் காரணம்?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வால்மீகி எழுதிய ராமயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு, மோஷன் கேப்சருடன் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்தப் படம் ‘ஆதிபுருஷ்’. இந்தப் படத்தில் ராமராக நடிகர் பிரபாஸும், ராவணனாக சயீஃப் அலிகானும், சீதாவாக கீர்த்தி சனானும், ராமரின் சகோதரர் லக்ஷமனாக சன்னி சிங்கும் நடித்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து சிஜி பணிகள் நடைபெற்றுவந்தநிலையில், அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தால், கடந்த ஆகஸ்ட் வெளியீட்டு தேதி பொங்கலுக்கு மாற்றப்பட்டது. மேலும் சிஜி பணிகளும் நிறைவடையாமல் இருந்தது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் வெளியீட்டை முன்னிட்டு, சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில் சமூகவலைத்தளத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது ‘ஆதிபுருஷ்’. கிராபிக்ஸ் பணிகள் சரியாக இல்லாததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். அத்துடன் ராமரை இந்தப் படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக வட இந்தியாவில் சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி அடுத்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் ஓம் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

image

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘ஆதிபுருஷ் ஒரு திரைப்படம் அல்ல, பிரபு ஸ்ரீ ராமர் மீதான நமது பக்தியை சித்தரிப்பதும், நமது வரலாறு மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றின் அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்துவதாகும். பார்வையாளர்களுக்கு முழுமையான காட்சி அனுபவத்தை அளிக்க, படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்களுக்கு இன்னும் அதிக நேரம் கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் ஆதிபுருஷ் படம் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும். இந்தியா பெருமைப்படும் வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம். உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் ஆசீர்வாதங்கள் தான் எங்களை தொடர்ந்து வழி நடத்துகிறது” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.