புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த சட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்தது தங்கள் கட்சிதான் என தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும், நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர். 3:2 என்ற வீதத்தில் வெளியாகிய இந்த தீர்ப்பு, அரசுக்கு வெற்றியாகவே கருதப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தலை ஒட்டி பாஜக அரசு இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது.
இந்நிலையில், இன்று (நவ 07) செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட 103-வது திருத்தம், அரசியல் சாசனத்திற்கு விரோதமானது அல்ல என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். SC / ST / OBC / MBC ஆகிய பிரிவுகளுக்குள் வராத முற்பட்ட வகுப்பினருக்கே இந்த இட ஒதுக்கீடு பொருந்தும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அடிப்படைப் பணிகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2005-06ல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். அப்போது, இது குறித்து ஆராய சின்ஹோ ஆணையம் அமைக்கப்பட்டதை ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டினார். இந்த ஆணையம் தனது பரிந்துரையை 2010-ல் வழங்கியதாகவும், அதன் பிறகு நாடு தழுவிய விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, 2014-க்குள் மசோதா தயாரிக்கப்பட்டதாகவும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு பாஜக உரிமை கோரி வரும் நிலையில், அதற்கு காங்கிரஸும் போட்டி போடுவது குறிப்பிடத்தக்கது.