போதைப்பொருள், லாட்டரி விற்பனையை ஒழிக்க காவல்துறை மும்முரம் காட்டி வருகின்றனர்: டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

சேலம்: போதைப்பொருள், லாட்டரி விற்பனையை ஒழிக்க காவல்துறை மும்முரம் காட்டி வருகின்றனர் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். தமிழ்நாடு காவல்துறையில், சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டார்.

இவ்விழாவில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம் மாநகரில் தற்போது 40 சதவிகிதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளது. லாட்டரி விற்பனை மற்றும் போதை பொருட்கள் தடை செய்வதில் சேலம் சரகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் சேலம் சரகத்தில் தற்போது வரை 120 கிராமங்கள் போதை பொருட்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத மாவட்டங்களாக சேலம் சரகத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவம் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை சமயங்களிலும், பண்டிகை காலங்களிலும், காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதை சரி செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, செல்போன்கள், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளை நேரில் பார்வையிட்டு வந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.