மணீஷ் சிசோடியாவுக்கு இறுகும் பிடி – அரசு தரப்பு சாட்சியாக மாறிய நண்பர்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழிலதிபர் தினேஷ் அரோரா, அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளார்.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசிலும், ஆட்சியிலும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக அதிகாரத்தில் இருப்பவர் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா.

இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக, துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரையின் அடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை முதல் நபராக வழக்கில் சேர்த்தனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த வழக்கில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழிலதிபர் தினேஷ் அரோராவை சிபிஐ கைது செய்தனர். கடந்த வாரம் அவருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அப்போது, சிபிஐ தரப்பில் எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் தினேஷ் அரோரா, அரசுத் தரப்பு சாட்சியாக மாறி உள்ளதாக, நீதிமன்றத்தில், சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், வழக்கு விசாரணைக்கு தினேஷ் அரோரா முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தினேஷ் அரோரா அரசுத் தரப்பு சாட்சியாக மாறி உள்ளதால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.