மும்பை: தெலுங்கானா மாநிலத்தில் நடைப்பயணத்தை நிறைவு செய்ய உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று இரவு மராட்டியத்தில் தனது பயணத்தை தொடங்குகிறார். நாடு தழுவிய பாத யாத்திரையை ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். கேரளா, கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் நடைப்பயணத்தை நிறைவு செய்த ராகுல் இன்று இரவு மராட்டிய மாநிலத்தில் 61-வது நாள் நடைப்பயணத்தை தொடங்க இருக்கிறார். இரவு 9 மணியளவில் தெலுங்கானாவில் உள்ள காமரெட்டியில் இருந்து மராட்டியத்தில் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள தெக்லுர் பகுதியை ராகுல் அடைய இருக்கிறார்.
அங்குள்ள சத்ரபதி சிவாஜி சிலை அருகே ராகுலுக்கு சிறப்பான வரவேற்பளிக்க மராட்டிய காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். 10 மணிக்கு தனது மராட்டிய பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி இரவு தெக்லுரில் உள்ள வளாகத்தில் தங்குகிறார். நாளை முதல் வரும் 20-ம் தேதி வரை மராட்டிய மாநிலத்தின் 5 மாவட்டங்களில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்கிறார். 10-ம் தேதி நாந்தெட் மாவட்டத்திலும், 18-ம் புல்தானாவில் உள்ள சென்காவ் பகுதியிலும் ராகுல் காந்தி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.