மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து மக்களை காக்க நடமாடும் மருத்துவமனைகளையும், மருத்துவ முகங்களையும் தமிழக அரசு ஏற்படுத்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. பரவலாக தமிழகமெங்கும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்தில் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மழைக் காலங்களில் மலேரியா, டெங்கு, காலரா, சிக்குன் குன்யா, சளி, இருமல், காய்ச்சல் மற்றும் “மெட்ராஸ் ஐ” என்று சொல்லக் கூடிய கண் நோய்கள் ஏற்பட வாய்புள்ளது. இக்காலங்களில் பெரியவர்களையும் சிறியவர்களையும் குழந்தைகளையும் சளி இருமல் காய்ச்சல் போன்றவை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது.
அவற்றில் இருந்து அவர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும்.
மழைக்காலங்களில் பெரும்பாலும் நோயை வரவழைப்பது அசுத்தமான குடிநீரும் சுகாதாரம் இல்லாத சுற்றுச்சூழலும் ஆகும். அவற்றில் முக்கியமாக தேங்கி நிற்கும் மழை நீரால் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மழைக்காலங்களில் குடிநீருடன் மாசுபட்ட நீர் கலப்பதால் காய்ச்சல் வயிற்றுப்போக்கு டைபாய்டு மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு பொது மருத்துவமனைகளையுமே நாடுகின்றனர்.
இருந்த பொழுதிலும் மேலும் அவர்களின் வசதிக்காக நடமாடும் மருத்துவமனைகளையும், மருத்துவ முகாம்களையும் ஏற்படுத்தி மழைக்காலங்களில் மக்களை நோயிலிருந்து காக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தற்பொழுது சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முற்றுப்பெறாமல் கொசுவின் பிறப்பிடமாக திகழ்கிறது. அவற்றையும் முழுமையாக முடிக்க வேண்டும். மக்களிடையே முறையான விழிப்புணர்வையும், அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகளையும் முன்னெச்சரிக்கையாக தங்கு தடையில்லாமல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.