மழையால் பீர்க்கங்காய் விளைச்சல் அமோகம்-கிலோ ரூ.50க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் பீர்க்கங்காய் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பிரதான பயிராகவும், மிளகாய், பருத்தி, சிறுதானியங்கள், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகள் போன்றவை லாபம் தரக்கூடிய விவசாய பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வெங்காய், மல்லி, காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் ஆங்காங்கே பயிரிடப்படுகிறது. இதில் பெரும்பாலான கிராமங்களில் பீர்க்கங்காய் பயிரிடப்படுகிறது. மிக குறைந்த செலவில் பயிரிடப்பட்டு லாபம் ஈட்டி தருவதாக உள்ளது.

ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தொண்டி, நயினார்கோயில், சத்திரக்குடி, போகலூர், பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, முதுகுளத்தூர்,அபிராமம், கடலாடி, சிக்கல் மற்றும் சாயல்குடி சுற்று வட்டார பகுதிகளில் கண்மாய் கரைகள், வரத்து கால்வாய் கரைகள் உள்ளிட்ட நீர்நிலை கரைகள், விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு தோட்டங்களில் பீர்க்கங்காய் பயிரிடப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது நன்றாக வளர்ந்து, காய் காய்த்து வருகிறது. காய்களை விவசாயிகள் வீட்டு ஆட்களுடன், கூலியாட்களை கொண்டு பறித்து வருகின்றனர். இதனை மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடைகளுக்கும், வாரச்சந்தைகளில் நேரடியாக விற்றும் லாபம் ஈட்டி வருகின்றனர்.
பெருமாள்தேவன்பட்டி விவசாயிகள் கூறும்போது, சாயல்குடி பகுதியில் பல கிராமங்களில் பீர்க்கங்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். கண்மாய் கரையிலுள்ள கரம்பை மண் களிமண்ணாக மாறக்கூடிய தன்மை கொண்டது என்பதால், கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும் போதை விதை, விதைத்து விடுவோம். ஒரு வாரத்திற்குள் செடி முளைத்து விடுகிறது.

ஒரு மாதத்தில் பூ, பூத்து காய் காய்த்து விடும். சுமார் 6 வாரங்கள் வரை நல்ல மகசூல் கிடைக்கும். தற்போது நல்ல விளைச்சல் கிடைப்பதால் கிலோ ஒன்றிற்கு ரூ.40 முதல் 50 வரை விலைக்கு விற்கிறோம். குறைந்த விலையில் வாங்கக்கூடிய மருத்துவ குணம் வாய்ந்த காய் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.மேலும் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, இளையான்குடி, கமுதி, பார்த்திபனூர், கோவிலாங்குளம், பரமக்குடி சந்தைகளில் நேரடியாக சென்றும், மற்ற நாட்களில் கடைகள் மூலமாக விற்று வருகிறோம். இதனை மதுரை போன்ற நகரங்களுக்கு கடை வியாபாரிகள் விற்று வருகின்றனர் என்றனர்.

கடலாடி அரசு சித்த மருத்துவர் பார்வதி கூறுகையில், பீர்க்கங்காய் இலை, காய், விதை என அனைத்திலும் எல்லா விதமான விட்டமின்கள், தாது உப்புகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுகிறது. மஞ்சள் காமாளை, சர்க்கரை நோய், கண்நோய்கள், தோல் நோய்கள், வயிற்று பிரச்னைகளுக்கு காய், இலை, விதை மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகியவை சிறந்த மருந்து. எனவே குறைந்த விலையில் கிடைப்பதால் மலிவு பொருள் என கருதாமல் அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம், முட்டை போன்றவற்றுடன் கலந்து கூட்டு தயாரித்து சாப்பிடலாம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.