நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தில், கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் வளர்ந்து வரும் நடிகரான விஷ்வாக் சென். இந்தப் படத்தை நடிகர் அர்ஜூனே தயாரிக்க உள்ளநிலையில், படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னே இருவரும், ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பார்க்கலாம்.
அர்ஜூன் குற்றச்சாட்டு:
தென்னிந்தியாவின் மூத்த நடிகரான அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, விஷாலுக்கு ஜோடியாக ‘பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமானார். பின்னர் ‘Prema Baraha’ என்ற கன்னடப் படத்தில் நடித்த அவர், தற்போது தனது தந்தை அர்ஜூனின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதியப் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் மூலம் கதாநாயகியாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் ஐஸ்வர்யா. இந்தப் படத்தில் மூத்த நடிகரான ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும், தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான விஷ்வாக் சென் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தனார்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் முன்னிலையில், சமீபத்தில் இந்தப் படத்திற்கான பூஜையும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனையடுத்து படக்குழுவினர் கேரளாவிற்கு படப்பிடிப்பு சென்றநிலையில் தான் தற்போது பிரச்சனை கிளம்பியுள்ளது. ஜெகபதி பாபுடனான காட்சியில் விஷ்வாக் சென் நடிக்க இருந்தநிலையில், அவருக்காக படக்குழுவினர் காத்திருந்துள்ளனர். ஆனால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை.
இதனால் கடுப்பான நடிகர் அர்ஜூன் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விஷ்வாக் சென்னை கடுமையாக சாடியிருந்தார். அதில், “நடிகர் விஷ்வாக் மிகவும் பொறுப்பற்றவராக இருக்கிறார். அவர் கேட்ட சம்பளத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகும், எனது அழைப்புகளுக்கோ, குறுஞ்செய்திகளுக்கோ பதிலளிக்கவில்லை. நான் அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்பு பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்களைக் காட்டவும் தயாராக இருக்கின்றேன்.
தனது கேரியரில் இவ்வளவு குறைந்த அர்ப்பணிப்பு கொண்ட நடிகரை பார்த்ததே இல்லை. அல்லு அர்ஜூன், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் போன்றோர் ஈடுபாட்டுடன் பணிபுரிகின்றார்கள். இந்த விவகாரத்தில் பணத்தை இழந்தாலும் கவலைப்பட மாட்டேன். என் வாழ்நாளில் நான் அவருக்கு போன் செய்ததுபோல் போல் வேறு யாருக்கும் அத்தனை முறை அழைத்தது இல்லை.
இந்த மோசமான சூழலில் அவரை வைத்து படத்தைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். எனினும் விஷ்வாக் சென் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளத்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு. 100 கோடி வந்தாலும் இனி அவருடன் பணிபுரிய மாட்டேன். அந்த அளவுக்கு என்னையும் எனது குழுவையும் அவர் மதிக்கவில்லை. அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க உள்ளேன் ” என்று காட்டமாக கூறினார்.
விஷ்வாக் சென் பதில்:
இந்த சர்ச்சை குறித்து முதலில் கருத்து எதுவும் தெரிவிக்காத தெலுங்கு நடிகர் விஷ்வாக் சென் தற்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ‘நான் நடிக்கும் படங்களின் விளம்பரங்கள் உட்பட அனைத்திலும் கலந்துகொண்டு அதிக ஈடுபாடு கொண்டுதான் நடித்து வருகிறேன். இதுவரை என்னுடன் பணியாற்றிய அனைத்து திரைப்படத் தயாரிப்பாளர்களின் படங்களிலும் அவர்களின் ஆலோசனைகளை ஏற்று நட்புச் சூழலில் பணியாற்றியுள்ளேன்.
ஆனால் அர்ஜூனின் படத்தில், படப்பிடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் முதல் பாதி ஸ்கிரிப்ட் எனக்கு கிடைத்தது. நான் ஆலோசனைக் கூறவோ, கருத்துக் கூறவோ எனக்கான இடமும், சுதந்திரமும் அர்ஜூன் கொடுக்கவில்லை. எப்போதும் என்னை சமாதானப்படுத்துவதிலேயே தான் இருந்தார். இதனால் படப்பிடிப்பிற்கு செல்லும் போது மன அழுத்தத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன். அதனால் தான் படப்பிடிப்புக்கு செல்லவில்லை.
எனினும் இந்தப் படத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் எனக்கு இல்லை. அர்ஜூனிடம் நான் கேட்டதெல்லாம் படத்தைப் பற்றிய சில விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றுதான். ஆனால் அதற்கு அர்ஜூனின் படக் குழுவினரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. திடீரென்று ஒருநாள், அவர்கள் கொடுத்த ஊதியத்தை திருப்பித் தருமாறு கேட்டனர்.
இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கத்தான் நினைத்தேன். ஆனால் தற்போது இந்த விவகாரத்தை சுற்றி நடக்கும் விவாதங்கள் என்னை பேச வைத்துள்ளது. படத்தின் தரத்தை உயர்த்தவே விரும்புகிறேன். அர்ஜூனை அவமதிப்பது எனது நோக்கம் கிடையாது. எனினும் அவரது படத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று அவர் தெளிவுப்படுத்தி முடித்தார்.