பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி. பார்திவாலா, பேலா திரிவேதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது.
அதன்படி, 5 நீதிபதிகளில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீடு சரி என்றும் 2 பேர் தவறு எனவும் தீர்ப்பு அளித்துள்ளனர். தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகிய இருவர் பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். மற்ற 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர். 3:2 என்ற அடிப்படையில், பெரும்பான்மை நீதிபதிகள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் உறுதியாகியுள்ளது.
உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவெடுத்த மத்திய அரசு, இட ஒதுக்கீட்டை வழங்க வழிசெய்யும் வகையில், இது தொடர்பான 103ஆவது சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வந்து அதற்கான மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவியிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சட்டமாகியது. அப்போதே இந்த சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினர் என்பதற்கான அளவுகோல் குறித்து சர்ச்சை எழுந்தது. ஆனாலும், எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய அரசு இந்த இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றத்திலும் அச்சட்டம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய அம்சங்களில் முக்கியமானது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்கு அளிக்கப்பட்ட வரையறை. ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் கீழ் வருமானம் உள்ளவர்கள் பின் தங்கியவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வரையறை எதன் அடிப்படையிலானது என்பது மிகப்பெரிய கேள்வி. அதேசமயம், இந்தியாவில் நாளொன்றுக்கு ரூ.32க்கு குறைவாக செலவு செய்யும் கிராமப்புறங்களில் வசிப்போரும், ரூ.47க்கு குறைவாக செலவு செய்யும் நகர்ப்புறங்களில் வசிப்போரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு வரயறுத்துள்ளது. ஆனால், வறுமை கோடு பற்றிய சர்வதே வரையறை நாளொன்றுக்கு 2 அமெரிக்க டாலர்கள் என்கிறது. அப்படி பார்த்தால், இந்தியாவில் சுமார் 70 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாகவே கருதப்படுவார்கள்.
இந்தியாவில் கடைசியாக, 1997 – 2002ஆம் ஆண்டில் 9ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ்தான் வறுமைக் கோடு பற்றி கடைசியாக கணக்கெடுக்கப்பட்டது. அதன்பின்னர் எடுக்கப்படவில்லை. இதனால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் குறித்து மத்திய அரசிடமே தெளிவான கணக்குகள் இல்லை. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானமே 1 லட்சம்தான். இண்டஹ் பின்னணியில், உயர் வகுப்பினருக்கு மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் என்ற வருமான வரம்பு எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்புகிறார் பொருளாதார வரலாற்று ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரீமி லேயர் என்ற பொருளாதார அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர். இதற்கான வரம்பு ஆண்டு வருமானம் 8 லட்சமாக உள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெற்றோராக இருந்தால், அவர்களின் பிள்ளைகள் பி.சி.க்கான இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாது. நாட்டில் சுமார் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கிரீமி லேயருக்கு கீழே உள்ள நிலையில், உயர்வகுப்பினரை மட்டும் மேலே கொண்டுவருவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. ஒன்றிய அரசுக்கு உயர் வகுப்பினரைத் தவிர பிறர் மீது அக்கறை இல்லையோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு; சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
“பட்டியலின, பழங்குடியின, ஓபிசி பிரிவு ஏழைகளுக்கு மறுத்து, உயர் சாதி ஏழைகளுக்கு மட்டும் தரப்படும் பாரபட்சமான 10 சதவீத ஒதுக்கீடு செல்லும் என்பதும், பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு அரசியல்சாசன சட்டப்படி செல்லத்தக்கதே என்பதும் விந்தையான வேடிக்கை.” என மூத்த பத்திரிகையாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியிலான படிநிலைகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை போக்குவதற்காக கொண்டு வரப்பட்ட குறைந்தபட்ச நிவாரணமே. இந்தியாவை பொறுத்தவரை, கல்வி, வேலைவாய்ப்பில் சாதியின் அடிப்படையிலேயே உரிமைகள் மறுக்கப்பட்டு வந்ததே ஒழிய, பொருளாதாரத்தின் அடிப்படையில் அல்ல. எனவே, இட ஒதுக்கீட்டில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமானால், அதனடிப்படையில்தான் கொண்டு வரவேண்டும்.
பொருளாதார ரீதியிலான இட இதுக்கீடு அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதும், இது போன்ற நடவடிக்கையை மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசு மேற்கொண்ட போது, அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது. ‘பொருளாதார உயர்வு ஒருவரின் சாதியையும் மீறி சமூக அந்தஸ்தை உயர்த்துவது இல்லை.’ என்று கடந்த 2018ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்தான் இந்த தீர்ப்பையும் அளித்துள்ளது.