நாமக்கல் அடுத்துள்ள கே.புதுப்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல், மோகனூர் ஒன்றியங்களில் உள்ள 37 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் 4.19 லட்ச ரூபாயில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்
மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்
முன்வைத்த குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை அல்ல. திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் கூறியது எதையும், அவர்கள் காலத்திலேயே நிறைவேற்றவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்து தமிழக முதல்வராக
பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு திட்டங்களை அறிவித்ததும் மட்டுமின்றி நிறைவேற்றியும் இருக்கிறோம். அதிமுக பயிர்க் கடன் என்று அறிவித்ததை நாங்கள் வந்து தான் நிறைவேற்றி உள்ளோம். இதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன பல விஷயங்களை நிறைவேற்றி விட்டோம்.
குறிப்பாக அரசு கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பதை தற்போதைய திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. இப்படி எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம் என்றார். தொடர்ந்து பேசுகையில், அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு மாறானது.
எங்கள் தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த பின்பு, எங்கேயும் தேவையற்ற முறையில் நாங்கள் பிளக்ஸ் பேனர்கள் அமைப்பதில்லை. நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மட்டும் தான் பிளக்ஸ் பேனர்கள் வைக்கிறோம். ஆனால் நேற்று நாமக்கலில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்கு வழிநடுவிலும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து பொதுமக்களுக்கு துன்பங்களையும் துயரங்களையும் அதிமுகவினர் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக நாமக்கல் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை முடக்க பி டீம் ஒன்றை உருவாக்கி முடக்கப் பார்க்கிறது திமுக. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றப் பார்க்கிறது. கடந்த ஆட்சியின் திட்டங்களை காப்பி அடிக்கிறது என்றெல்லாம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கு தான் திமுக எம்.பி இன்று அதே நாமக்கலில் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.