கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள வாவறை பகுதியில் வசித்து வருபவர் சின்னப்பர் (56). கூலித்தொழிலாளியான இவருக்கு தங்கபாய் (51) என்ற மனைவியும் 3 மகள்களும் இருந்தனர். இவர்களில் 2 மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் 3-வது மகள் அபிதா (19) களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அபிதா நித்திரவிளை பாணாந்தோப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞரும் அவரை திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளைஞரின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அபிதாவை திருமணம் செய்ய இளைஞர் மறுத்துள்ளார். இதையடுத்து அபிதா வீட்டில் யாரிடமும் அதிகம் பேசாமல் சோகமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி காலை வீட்டில் இருந்த அபிதா திடீரென வயிறு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். அவரை பெற்றோர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு 3 நாட்கள் சிகிச்சை அளித்த பின்பு மேல்சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமற்றியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.