தெலங்கானா, பிகார், ஓடிசா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களி்ல் காலியாக இருந்த ஏழு எம்எல்ஏ தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் முக்கியமாக மகாராஷ்டிர மாநிலம், அந்தேரி கிழக்கு தொகுதியின் தேர்தல் முடிவு அம்மாநிலத்தை தாண்டி தேசிய அளவில் மிகவும் கவனத்தை பெற்றுள்ளது.
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சிவசேனாவில், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி உருவாகவே, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு சில மாதங்களுக்கு முன் கவிழ்ந்தது. அதன்பின், பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா ஆட்சி அமைத்தது.
ஆனால், ஆட்சியை பறிகொடுத்தாலும் கட்சிக்கு உத்தவ் தாக்கரே தொடர்ந்து உரிமை கோரி வந்தார். தாக்கரே வசமிருந்து ஆட்சியை தட்டிப்பறித்த ஷிண்டே, கட்சியையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லாததால், விஷயம் தேர்தல் ஆணையத்துக்கு போக, சிவசேனை கட்சியின் பெயரும், வில் அம்பு சின்னமும் முடக்கப்பட்டது.
அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் உத்தவ் சிவசேனா, ஷிண்டே சிவசேனா என கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து களம் கண்டது. ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி என்ற முறையில் ஷிண்டே அணிக்கு ஆதரவு அளித்ததுடன் நின்று கொண்டது பாஜக. சிவசேனை கட்சி ஷிண்டே அணிக்கு முழுமையாக சொந்தமாகட்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் சாணக்கியத்தனமான இந்த முடிவை எடுத்திருந்தது பாஜக. பாஜகவின் இந்த முடிவால் இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகளுக்கு இடையே நீயா, நானா போட்டி நிலவியது. இந்த போட்டியில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் ருதுஜா லத்கே, ஷிண்டே அணி வேட்பாளரை 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்றுள்ளார்.
இதனை வழக்கமானதொரு இடைத்தேர்தல் வெற்றியாக பார்க்க முடியாது என்று பராக்கிரமாக கூறுகின்றனர் தாக்கரே ஆதரவாளர்கள், தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்தான் கட்சி்க்கு தற்காலிகமாக புதிய பெயர் , சின்னம் அளிக்கப்பட்டிருந்தது. மகாராஷ்டிர மாநில மக்களுக்கு நன்கு பரிச்சயம் ஆன சிவசேனை கட்சியின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தில் போட்டியிடுவதற்கு மாறாக, புதிய சின்னத்தி்ல் போட்டியிட்டு இவ்வளவு பெரிய வெற்றியை பெறுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
அத்துடன் இந்த மகத்தான வெற்றியின் மூலம், இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற வகுக்கப்படாத விதியும் மாற்றி எழுதப்பட்டிருப்பதாக புளங்காகிதம் அடைகின்றனர் தாக்கரே ஆதரவாளர்கள்.
அந்தேரி கிழக்கு தொகுதியில் பெற்றுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியின் மூலம், சிவசேனா மீண்டும் முழுமையாக உத்தவ் தாக்கரே வசம் விரைவில் வந்துவிடும் நம்பிக்கை தெரிவிக்கும் உத்தவ் ஆதரவாளர்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தங்களது வெற்றிப் பயணம் தொடரும் என்று அடித்து கூறுகின்றனர்.
2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், பாஜக 25 இடங்களிலும் கூட்டணி கட்சியான சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிட்டன. அதில் பாஜக 23, சிவசேனா 18 என மொத்தம் 41 இடங்களை இக்கூட்டணி மொத்தமாய் அள்ளியது.
ஆனால் தற்போது இந்த கூட்டணி உடைந்து, உத்தவ் தாக்கரே அணி, ஷிண்டே அணி என சிவசேனா இரண்டாக உடைந்து போய் உள்ளது. இதில் ஷி்ண்டே அணியுடன் பாஜக கைகோர்த்திருக்க, அந்தேரி கிழக்கு உத்தவ் தாக்கரே கொடி நாட்டி உள்ளார். இந்த இடைத்தேர்தல் வெற்றியின் மூலம், சிவசேனா கட்சி கூடியவிரைவில் உத்தவ் தாக்கரே வசம் வர அதிக வாய்ப்புள்ளது.
அப்படி வரும்பட்சத்தில், எதிர்வரும் 2024 எம்பி தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும். மகாராஷ்டிர மாநிலத்தை பொறுத்தவரை சிவசேனா கூட்டணியில்தான் இதுவரை பெரும்பாலும் போட்டியிட்டு பாஜக வெற்றியை சுவைத்துள்ளது. இதன்படி பார்க்கும்போது, ஷிண்டேவுடன் கைோர்த்து கொண்டு தற்போது ஆட்சி நடத்திவரும் பாஜக, 2024 மக்களவைத் தேர்தலில் ஷிண்டேவை கழற்றிவிட்டு மீ்ண்டும் சிவசேனாவுடன் கைகோர்க்குமா?
அப்படி கைகோர்த்தால், ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஆதரவுகரம் நீட்டி, தாக்கரே தலைமையிலான ஆட்சியை கவிழ்த்ததற்கு பதிலடியாக, எம்பி தேர்தலில் சிவசேனா குறைந்த இடங்களை மட்டுமே ஒதுக்கினால் அதனை பெற்றுக் கொள்ள பாஜக முன்வருமா?
இல்லை… சிவசேனாவை எதி்ர்த்து அனைத்து தொகுதிகளிலும் பாஜக களம் காணுமா? அப்படி களம் கண்டால் பாஜகவின் வெற்றி சாத்தியமா? என அந்தேரி இடைத்தேர்தல் முடிவின் அடிப்படையில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கான விடை நாளைக்கு எதுவாக இருந்தாலும், உத்தரப் பிரதேசத்தை அடுத்து அதிக எம்பி தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில், வரும் 2024 இல் பாஜகவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.