நானா போந்தா: வெறுப்புணர்வை பரப்பி, குஜராத்தை அவமானப் படுத்தியவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அப்புறப்படுத்தப்படுவர் என பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியிடப்படவுள்ளன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக., காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. டெல்லி, பஞ்சாப் ஆட்சியைப் பிடித்தது போல குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டபின், அங்குள்ள வல்சாத் மாவட்டத்தில் கப்ரதா சட்டப்பேரவை தனி தொகுதியில் நானா போந்தா என்ற இடத்தில் நேற்று நடந்த முதல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் இதர பாஜக தலைவர்களும் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
வெறுப்புணர்வை பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிரிவினை சக்திகள், கடந்த 20 ஆண்டுகளாக குஜராத்தை அவமானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் இந்த சட்டப்பேரவை தேர்தலில் குஜராத்தை விட்டு வெளியேற்றப்படுவர்.
குஜராத்தில், இந்த முறை பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இடங்களை கைப்பற்றும் என டெல்லியில் இருக்கும் எனக்கு தகவல்கள் வருகின்றன. எனது பழைய சாதனைகளை முறியடிப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். இங்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு முடிந்த அளவு அதிக நேரம் ஒதுக்க தயார் என குஜராத் பாஜகவினரிடம் நான் கூறியுள்ளேன்.
குஜராத் மக்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். அதனால் குஜராத்திகள் ஒவ்வொருவரும் ஆத்மாவின் குரலை பேசுகின்றனர். இந்த குஜராத்தை நான் உருவாக்கினேன் என்ற ஒலி குஜராத்தின் இதயத்திலிருந்து வெளிப்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
‘இந்த குஜராத்தை நான் உருவாக்கினேன்’ என்ற கோஷத்தை பிரச்சார கூட்டத்துக்கு வந்திருந்த தொண்டர்களும் பலமுறை முழங்கும்படி பிரதமர் மோடி கூறினார். இது தற்போது குஜராத் பாஜகவின் புதிய தேர்தல் கோஷமாக மாறியுள்ளது.