பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு, “சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு” என முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘இந்த தீர்ப்புக்காக, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்’ என்றும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விரிவான தகவலுக்கு: 10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இன்று வழங்கிய தீர்ப்பின் முழு விவரம்!
இந்தத் தீர்ப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திமுக முன்னெடுத்து நடத்தி வந்தது.
இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது. எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM