புதுடெல்லி: மத்திய பிரதேச பூங்காவில் உள்ள நமீபியா சிவிங்கி புலிகளில், 2 மட்டும் வனப்பகுதிக்குள் திறந்து விடப்பட்டுள்ளன. இந்தியாவில் அழிந்து விட்ட சிவிங்கி புலிகளை மீண்டும் இனப்பெருக்கம் செய்வதற்காக, நமீபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டன. மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய உயிரியல் பூங்காவில் இவற்றை, கடந்த செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடி தனது பிறந்த நாளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் திறந்து விட்டார்.
இந்தியா வந்து 50 நாட்கள் முடிந்த நிலையில், இந்த சிவிங்கிப் புலிகள் இந்திய சுற்றுச்சூழலை ஏற்று வாழ்வதற்கான நிலையை அடைந்துள்ளன. எனவே, இவற்றை காட்டில் திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், முதல் கட்டமாக 2 ஆண் சிவிங்கி புலிகள் மட்டும் கடந்த சனிக்கிழமை 5 சதுர கிமீ பரப்பளவு வனப்பகுதிக்கள் திறந்து விடப்பட்டன.
இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில்:
குனோ வனச்சூழலை ஏற்றுக் கொண்டு பெரிய பரப்பளவில் வாழும் வகையில், கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து 2 சிவிங்கி புலிகள் காட்டிற்குள் அனுப்பப்பட்ட நல்ல செய்தி கிடைத்தது. மற்றவையும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளன. எல்லா சிவிங்கி புலிகளும் ஆரோக்கியமாக, சுறுசுறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்கின்றன,’ என்று கூறியுள்ளார். மேலும், அந்த 2 சிவிங்கி புலிகள் காட்டில் திரியும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.