துபாய்,
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின.
இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த உலகக்கோப்பையில் ஏராளமான அதிர்ச்சி தோல்விகள் அரங்கேறின, அதில் இலங்கை அணி நமிபியாவிடம் தோல்வி, வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோல்வி, இங்கிலாந்து அணி அயர்லாந்திடம் தோல்வி, பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயிடம் தோல்வி, தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி ஆகியவை அடங்கும்.
இதில் தென் ஆப்பிரிக்க அணி தனது கடசி ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், அடுத்த டி20 உலகக்கோப்பை 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளது.இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக இதுவரை 12 அணிகள் முன்னேறி உள்ளன. அந்த அணிகளின் விவரம்:-
போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதோடு இந்த உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இரு குரூப்பிலும் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
அதன் படி, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிகா, நெதர்லாந்து அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும் ஐசிசி தரவரிசை அடிப்படையில் இரண்டு (வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்) அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
இதையடுத்து, ஆப்பிரிக்க தகுதி சுற்றில் 2 அணிகள், அமெரிக்க தகுதி சுற்றில் 1 அணி, ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன.
2024- டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள அணிகள்:-
ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்.