பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படம் 3 நாட்களிலேயே சுமார் 27 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் புரிந்துள்ளது.
ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக தனது ‘App(A) Lock’ என்ற குறும்படத்தை, ‘லவ் டுடே’ என்றப் பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தப் படத்தை இயக்கியது மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’, சுந்தர் சி-யின் ‘காஃபி வித் காதல்’ ஆகியப் படங்களுக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம், 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் சுமார் 27 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 3 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தக் காலத்து காதல், நகைச்சுவை மற்றும் 2கே கிட்ஸ்-க்கு பிடித்தவிதத்தில் இருப்பதால், திரையரங்குகளில் நல்ல வரவேற்பும், விமர்சகர்களிடையே பாசிட்டிவ் ரென்பான்ஸும் ‘லவ் டுடே’ படம் பெற்று வருகிறது.
இதனால் மற்ற 2 படங்களைவிடவும், இந்தப் படத்திற்கான திரையரங்கு காட்சிகள் அரங்கு நிறைந்தே காணப்படுகிறது. வரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.