10 சதவீத EWS இடஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அதுதொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துகள் தேசிய அளவில் தலைப்பு செய்திகளாக மாறியுள்ளன. ஆதரவும், எதிர்ப்பும் என இரண்டும் மாறி, மாறி வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக தீர்ப்பளித்த 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் கூட 3:2 என்ற விகிதத்தில் ஆதரவாகவும், எதிராகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இத்தகைய முரண்பாடு மக்கள் மத்தியிலும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த இடத்தில் EWS எனப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதிகள் யார்? என்ற கேள்வி பலருக்கும் எழக்கூடும். மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி, SC, ST, OBC ஆகிய பிரிவுகளில் இல்லாதவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் MBC பிரிவும் வராது. இவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். ஆயிரம் சதுர அடிக்கு குறைவாக வீடு வைத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட விதிகளின்படி இருந்தால் அவர்கள் ”உயர் சாதி ஏழைகள்”. அதாவது பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினர். இவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பெற முடியும். அதெப்படி? இடஒதுக்கீடு என்பது சமூக அடிப்படையில் கீழ்நிலையில் இருப்பவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வதற்காக கொண்டு வரப்பட்டது தானே? இதில் எப்படி பொருளாதாரம் புகுந்தது.
அதை வைத்து இடஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியாகுமா? என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்புவதை பார்க்க முடிகிறது. இந்த விஷயத்தில் திராவிடக் கட்சிகள் நூறாண்டு கால போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. இப்படியொரு சூழலில் தான் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதி கோட்பாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானது. இது உச்ச அநீதி. இதனை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா சாதிகளிலும் உள்ள ஏழைகளுக்கு இல்லை.
உயர்சாதி ஏழைகளுக்கு மட்டும்தானாம். அப்படியென்றால், இது எப்படி பொருளாதார அளவுகோலைக் கொண்ட தீர்ப்பாகும்? சாதி அடிப்படையிலான பொருளாதார அளவுகோல் என்பது சமத்துவத்தை மறுக்கிறது என்றே இருவர் செல்லாது என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்புடன்
உடன்படவில்லை என்று தெரிகிறது. எனவே திருமாவளவன் மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் EWS தீர்ப்பு விவகாரத்தில் சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.