EWS reservation: அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு உறுதியாகுமா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்று

புதுடெல்லி: அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு உறுதியாகுமா? என்ற அனைவரும் இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கல்வி மற்றும் அரசு வேலைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்பு திருத்தம் செல்லுபடியாகுமா என்ற எதிர்பார்ப்புகளுக்கான தீர்வு இன்று கிடைத்துவிடுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

103வது அரசியலமைப்பு திருத்தத்தின் செல்லுபடி தன்மை குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (2022, நவம்பர் 7 திங்கட்கிழமை) அறிவிக்க உள்ளது. 

உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நவம்பர் 7ஆம் தேதிக்கான காரணப் பட்டியலின்படி, இந்திய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கும்.

கடந்த செப்டம்பர் 27 அன்று, அப்போதைய அட்டர்னி ஜெனரல் உட்பட மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு என்பது, அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறதா என்ற சட்டப்பூர்வ கேள்விக்கான தீர்ப்பை ஒத்திவைத்தது.

மூத்த வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆறரை நாட்களாக தொடர்ந்து இந்த வழக்கில் வாதங்களை முன்வைத்தனர். 

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ். ரவீந்திர பட், பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய சட்ட அமர்வு முன், கல்வியாளர் மோகன் கோபால் செப்டம்பர் 13 அன்று வாதங்களைத் தொடங்கி, EWS ஒதுக்கீட்டுத் திருத்தத்தை “வஞ்சகமானது” என்று குறிப்பிட்டு எதிர்த்தார்.  

தமிழ்நாடு அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு தரும் சட்டத் திருத்தத்தைடை எதிர்த்தார், பொருளாதார அளவுகோல் என்பது, இடஒதுக்கீடு வகைப்படுத்தலுக்கு அடிப்படையாக இருக்க முடியாது என்றும், இந்த இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த முடிவு செய்தால் உச்ச நீதிமன்றம் இந்திரா சாவ்னி (மண்டல்) தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

இந்த சூழ்நிலையில், அனைவரிடமும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் இன்று உயர் நீதிமன்ற சட்ட அமர்வின் தீர்ப்பு பலரின் ஆர்வத்தைத் தூண்டி இருப்பதோடு, எதிர்பார்ப்புகளையும் சர்ச்சைகள் மற்றும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.