அனுபவம் இல்லையெனில் அரசு வேலை கிடையாது என, கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அதிரடியாக அறிவித்து உள்ளார்.
கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலைவாய்ப்பு கண்காட்சி ஒன்றில் இளைஞர்களிடம், அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பேசியதாவது:
இனி நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன் பலர் கணக்கு மற்றும் பிற பதவிகளுக்காக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். இனி இவ்வாறு நடக்காது. அரசு வேலைக்கு குறைந்தபட்சம் தனியார் துறையில் ஒரு வருட அனுபவம் தேவை.
எதிர் காலத்தில் அரசு வேலை ஆட்சேர்ப்பின் போது முந்தைய பணி அனுபவம் கட்டாயம் சேர்க்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் அரசு பதவிக்கு விண்ணப்பிக்கும் முன் தனியார் துறையில் வேலை தேட வேண்டும். கோவா அரசு ஒருபுறம் உள்கட்டமைப்பை உருவாக்குகிறது; மறுபுறம் மனித வளத்தை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளது. உருவாக்கப்பட்ட மனித வளத்தின் திறமையை தனியார் மற்றும் அரசு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று நாங்கள் யோசித்து வருகிறோம்.
நேரடியாக வேலைகளை வழங்குவதை நிறுத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த நடைமுறை எங்களுக்குத் திறமையான மனித வளத்தை வழங்கும். ஆட்சேர்ப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்ற முடிவு செய்துள்ளோம். கடந்த 30 ஆண்டுகளாக அவை மாறவே இல்லை. பட்டதாரிகளும் மற்றவர்களும் தங்கள் தகுதியை மேம்படுத்தக் கூடுதல் படிப்புகளைக் கற்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறினார்.