நியூயார்க்: அண்டத்தின் ‘வைல்ட் டிரிப்லெட்’ (248- Wild’s Triplet) எனப்படும் இரண்டு விண்மீன் மண்டலங்களின் புகைப்படத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது.
வைல்ட் டிரிப்லெட் விண்மீன் மண்டலங்கள் பூமியிலிருந்து 200 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. இதன் புகைப்படத்தை ஹப்பிள் தொலைநோக்கி அழகாகவும், தெளிவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ’வைல்ட் டிரிப்லெட்’ எனப்படும் இரு விண்வெளி மண்டலங்களும் ஈர்ப்பு விசையினால் ஒன்றின் பால் ஒன்று ஈர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதன் காரணமாக இந்த இரு விண்மீன் மண்டலங்களின் இடையே லுமினஸ் பாலம் ஒன்றை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த லுமினஸ் பாலம் ஹப்பிள் எடுத்த புகைப்படத்திலும் தெளிவாகத் தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்னர் நமது பால்வெளி மண்டலத்தின் அருகே உள்ள சுருள் வடிவ விண்மீன் மண்டலத்தின் புகைப்படத்தை ஹப்பிள் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்தான் வைல்ட் டிரிப்லெட் விண்மீன் மண்டலங்களை ஹப்பிள் வெளியிட்டுள்ளது.
ஹப்பிள் தொலை நோக்கியின் பண்புகள்:
- ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி 1990-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி இதுவாகும். *
- ஹப்பிள் தொலைநோக்கி ஒரு பேருந்து அளவுள்ளது. 97 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை ஹப்பிள் சுற்றிவருகிறது. (இந்த வேகத்தில் சென்றால் சுமார் ஒன்றரை நிமிடத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்றுவிடலாம்).
- அகச்சிவப்பு கதிர், புறஊதா கதிர், காணுறு ஒளி ஆகிய மூன்று அலைநீளங்களில் நிறமாலைமானி மற்றும் காட்சி செய்யும் திறன் கொண்டது.
- 0.05 வினாடி டிகிரி விலகியுள்ள பொருட்களைக்கூட பிரித்து இனம் காணும் காட்சித் திறன் கொண்டது.