90களின் தொடக்கத்திலிருந்தே முக்கியமான நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இயக்குநராகவும் சில படங்களை இயக்கியவர். இவர் தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்குப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகரான விஸ்வக் சென் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் படப்பிடிப்பிற்குச் சரியாக வரவில்லை என்று கூறி படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் அர்ஜுன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “என் மகள் ஐஸ்வர்யாவைத் தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காக இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டேன். நடிகர் விஸ்வக் சென்னிடம் படத்தின் கதையைச் சொன்னதும் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுக்க ஒப்புக்கொண்டோம்.
ஆனால், அவர் படப்பிடிப்பிற்குச் சரியாக வரவில்லை. என் வாழ்நாளில் இத்தனை முறை யாருக்கும் நான் போன் செய்ததில்லை. ஒரு நடிகருக்கு அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியம். அது விஸ்வக் சென்னிடம் இல்லை என்பதால் அவரைப் படத்திலிருந்து நீக்கி அதற்குப் பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளேன்” என்று பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது நடிகர் விஸ்வக் சென் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய விஸ்வக் சென், “பொதுவாக ஒவ்வொரு படத்துக்காகவும் 40 நாள்கள் ஷூட்டிங், 20 நாள்கள் விளம்பரப்படுத்துவதற்கு என்கிற ரீதியில் திட்டமிடுவேன். நான் மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகர் என்று நம்புகிறேன்.
அர்ஜுன் படத்திற்கான முதல் பாதி ஸ்கிரிப்டைப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் என்னிடம் கொடுத்தார். கதை பற்றி நன்றாக விவாதித்து அதன்பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்றேன். ஆனால் அவர் எனது ஆலோசனைகளைக் கேட்கவில்லை. அவரின் இது போன்ற செயல்கள் எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தின. அதனால்தான் படப்பிடிப்புக்குச் செல்லவில்லை. படத்திலிருந்து நான் தானாகவே விலகவில்லை. நான் எப்பொழுதும் என் பிரச்னைகளை நான்கு சுவர்களுக்கு நடுவே தீர்த்துக் கொள்வேன். ஆனால் அவர் இந்தப் பிரச்னையை ஊடகங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்” என்று விஸ்வக் சென் பதிலளித்துள்ளார்.