இஸ்லாமாபாத்,
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 25 பந்துகளில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அந்த போட்டியில் ஜிம்பாப்வேயை 71 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. அப்போட்டியில், சூர்யகுமாரின் ஆட்டம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் இந்திய வீரர் சூர்யகுமாரை புகழ்ந்துள்ளார். பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசிம் அக்ரம் இந்திய வீரர் சூர்யகுமாரின் ஆட்டத்தை புகழ்ந்தார்.
வாசிம் அக்ரம் கூறியதாவது, சூர்யகுமார் வெறோரு கிரகத்தில் இருந்து வந்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். சூர்யகுமார் அனைவரையும் விட முழுமையாக வித்தியாசமானவர். ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டுமல்ல உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் அடித்த ரன்களை பார்க்கும்போது அவரது ஆட்டம் கொண்டாட்டத்திற்கு உரியது’ என்றார்