’இந்து’… இந்த வார்த்தை எங்கிருந்து வந்துச்சு? அர்த்தம் தெரிஞ்சா அவ்ளோ தான்… காங்கிரஸ் தலைவர் பேச்சால் சர்ச்சை!

கர்நாடக மாநிலத்தில்
காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவராகவும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் இருப்பவர் சதிஷ் ஜர்கிஹோலி. இவர் பெலகாவி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இந்து மதம் நம் மக்கள் மீது கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்டுள்ளது. ’இந்து’ என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா? பெர்சியாவில் இருந்து தான்.

இந்தியாவிற்கும், பெர்சியாவிற்கும் என்ன தொடர்பு? இந்து எப்படி நம் மதம் ஆகும்? வாட்ஸ்-அப், விக்கிபீடியா ஆகியவற்றில் தேடிப் பாருங்கள். இந்த வார்த்தை நம்முடையது அல்ல. இதற்கு மோசமான அர்த்தம் இருக்கிறது. தெரிந்தால் வருத்தப்படுவீர்கள். அப்படியிருக்கையில் அதை ஏன் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை சமூகமாக வசித்து வரும் சூழலில் காங்கிரஸ் தலைவரின் பேச்சு பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. பாஜக மட்டுமின்றி சதிஷ் ஜர்கிஹோலி அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்தே எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜகவை சேர்ந்த எஸ்.பிரகாஷ், முன்னாள் சதிஷ் ஜர்கிஹோலியின் பேச்சை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

முன்னதாக சித்தராமையா இப்படி தான் பேசிக் கொண்டிருந்தார். தற்போது அவரது சிஷ்யரான சதிஷ் ஜர்கிஹோலியும் செய்யத் தொடங்கிவிட்டார். இந்த பேச்சிற்கு காங்கிரஸ் உரிய விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது ட்விட்டரில், இது துரதிஷ்டவசமான நிகழ்வு. இந்து என்பது வாழ்க்கை முறை.

இதுவே நாகரீக வாழ்வின் யதார்த்தம். ஒவ்வொரு மதத்திற்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கும் வகையில் தான் காங்கிரஸ் இந்த நாட்டை கட்டியெழுப்பியது. இதுதான் இந்தியாவின் சாராம்சம். சதிஷ் ஜர்கிஹோலி பேசியது மிகவும் மோசமானது. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை சந்தேகத்திற்கு இடமின்றி காங்கிரஸ் கண்டிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில் தபஸ்வி சவ்னி அயோத்தியை சேர்ந்த ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா அவர்கள், சதிஷ் ஜர்கிஹோலிக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதேபோன்ற ஒரு நிகழ்வு தமிழகத்திலும் நடந்திருக்கிறது. இந்து என்றால் திருடன் என்று விஷ்வகோஷ் என்ற இந்தி அகராதியில் இருப்பதாக கடந்த 2002ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி பேசியிருந்தார்.

அதற்கு பாஜகவின் இல.கணேசன் பதிலடி கொடுத்தார். அதாவது, கருணாநிதி அந்த அகராதியை சரியாக படிக்கவில்லை எனத் தெரிகிறது. அதில் திருடன் என்ற பொருள் மட்டும் போடப்படவில்லை. மாறாக நூற்றுக்கணக்கான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஈரானை சேர்ந்த பார்சி மொழியில் அமைந்துள்ள ஓலைச் சுவடிகளில் நமது நாடு ’இந்து’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அது பின்னர் ’இந்த்’ என மாறியது. ஈரானியர்கள் இஸ்லாமுக்கு மாறிய பின்னர் இந்து என்ற வார்த்தைக்கு தவறான பொருளை உருவாக்கியதாக குறிப்பிட்டிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.