'இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்' – கண்ணீர்விட்டு கதறிய சமந்தா

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, குஷி, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருகிறார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் யசோதா திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. 

இருப்பினும், சில நாள்களுக்கு முன் சமந்தா அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. இதுகுறித்து சமந்தா, கடந்த அக். 29ஆம் தேதி அன்று அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அரிய வகை நோய்களில் ஒன்றான இதில் இருந்து விரைவில் குணமடைவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வும், தசை வலியும் அதிகமிருக்கும் என கூறப்படுகிறது. இந்த நோயில் இருந்து முற்றிலுமாக குணமடைய சற்று காலமெடுக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சிறிதுநேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ அவர்கள் சோர்வாகி அடிக்கடி மயக்கமிடவும் வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

‘போர்புரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்’

இத்தகைய நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும், ‘யசோதா’ திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு அவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நேற்று (நவ. 7) சிறப்பு பேட்டிகளை அளித்திருந்தார். நீண்ட பயணங்கள் காரணமாக, நேற்றைய பேட்டியில் அவரின் உடலும், மனமும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும், பேட்டியில் அவர் வலுவிழந்து மிகவும் பொழிவு இழந்து காணப்பட்டார். 

அப்போது, தெலுங்கு நெறியாளர் சுமாவிடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென கண்ணீர்விட்டு அழுதது பார்ப்போர் மனதையே உருக்கிவிட்டது. அந்த பேட்டியில்,”இன்னும் சிறிது நாள்களில் என்னால் ஓர் அடிக்கூட நடக்க முடியுமா என தெரியவில்லை. கடந்த காலங்களை திரும்பி பார்க்கும்போது, நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், தற்போது நிலையே மாறியுள்ளது. கடினமாக போர்புரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்ற கூறியபோது சமந்தா உடைந்து அழுதார். நெறியாளர் சுமா அவரை சமாதானப்படுத்தினார். 

பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அவர்,”நீண்ட நாள்களாக அதிக டோஸ்களில் மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன், இடைவிடாமல் மருத்துவர்களிடம் சென்று வருகிறேன். சில நாள்கள் நமக்கு கடினமானதாக இருக்கும், நாம் உடல் வலுவிழந்தும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை நான் நம்புகிறேன்” என்றார். 

மேலும், தனது உடல்நிலை குறித்த அறிவிப்புக்கு பின், பெரும் ஊடக அவதானிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா,”நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்” என உருக்கமாக கூறினார். 

மீண்டு வருவீர்கள் சமந்தா

சமந்தா, தாங்கிக்கொள்ளவே முடியாத வலியால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார். இந்த நோயால் வரும் பின்விளைவுகளால் பலரும் நொறுங்கிப்போயிருக்கிறார்கள். ஒரு நடிகையாக அதை வெளிப்படையாக பேசி, அதிலிருந்து முற்றிலுமாக வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். அதை அவர் தொடர்ந்து எதிர்த்து போராடி வருகிறார். 

அதிலிருந்து நிச்சயம் அவர் மீண்டு வருவார். வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் ‘யசோதா’ திரைப்படம் அவரின் கடுமையான பயணத்திற்கு, ஓர் இனிய தொடக்கத்தை அளித்து அவருக்கு ஆறுதலாக அமைய வேண்டும் என நம்புவோம் என சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கும் ஆறுதலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.