சென்னை: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. இதை சிறப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கண்களால் பார்க்க முடியும். முழு சந்திரன் தோன்றும் நாளில் (பவுர்ணமி) சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மே 16-ம் தேதி தென்பட்டது. அதைத் தொடர்ந்து, 2-வது சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும்.
இதுதொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்க செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் கூறியதாவது: பூமியின் நிழலில் சந்திரன் கடந்து செல்லும்போது, அது சூரியனின் நேரடியான ஒளியை பெற இயலாமல் போய்விடுவதால் சந்திரன் ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம். சந்திர கிரகணத்தின்போது, சூரியனின் எதிர் திசையில் சந்திரன் வருவதால் பவுர்ணமியின்போதுதான் சந்திர கிரகணம் தெரியும். சந்திரன் முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணம் ஆகும். பூமியின் நிழல், பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காணலாம்.
இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 மணிக்கு முடிவடையும். இதில் முழு சந்திர கிரகணம் மாலை 3.46 மணி முதல் 5.11 வரை தென்படும். சென்னையில் மாலை 5.38 மணிக்குதான் சந்திரன் உதயமாகும். எனவே, முழு கிரகணத்தை காண இயலாது. பகுதி கிரகணமும், சந்திரன் உதித்த சில நிமிடங்களில் முடிந்துவிடும். கடந்த அக்.25-ம் தேதி பகுதி சந்திர கிரகணம் தென்பட்டது. அடுத்த பகுதி சந்திர கிரகணத்தை 2023 அக்.28-ம் தேதி காணலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதாலும், சிறப்பு உபகரணங்கள் இன்றி, இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பதாலும், கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் இந்நிகழ்வை காண சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல கோயில்களில் இன்று நடைகள் அடைக்கப்படுகின்றன.