இளைஞர்கள் கனவில் மண் அள்ளிப்போடும் திமுக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்!

அரசு வேலைக்காக முயற்சித்து வரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப் போடும் விதமாக திமுக அரசு செயல்படுவதை ஏற்க முடியாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்து உள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதுஅரசு வேலைக்காக முயற்சித்து வரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க அரசு செயல்படுவதை ஏற்க முடியாது.

அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பணியிலுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார் மயமாக்க தி.மு.க அரசு, திட்டமிட்டிருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

அரசு எந்திரத்தின் மூளையாக செயல்படும் அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டால், ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் தனியார் வசம் போய் விடாதா? சற்றேறக்குறைய இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்குச் சமமாகும். புரட்சித்தலைவரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.வின் போலி திராவிட மாடல் அதைத்தான் செய்ய விரும்புகிறதா?

தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அரசு ஊழியர்கள், இளைஞர் சக்தி மற்றும் பொது மக்களோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.