கெய்ரோ: எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் ‘சிஓபி27’ என்ற தலைப்பில் அனைத்து உலகப் பருவநிலை மாற்ற மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 18-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஷர்ம் எல்-ஷேக் நகருக்கு வந்துள்ளனர். ஆனால், இந்த மாநாட்டினைவிட கூடுதல் கவனம் பெற்றிருக்கிறார் எகிப்து நாட்டினைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அலா அப்துல் பத்தாஹ். இவர் தற்போது எகிப்து நாட்டு சிறையில் இருக்கிறார்.
இவரைப் பற்றி ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் கலாமர்ட் கடந்த ஞாயிறு இரவு ஒரு ட்வீட்டைப் பதிவு செய்திருந்தார். அதில் அவர், “எகிப்துக்கு வெறும் 72 மணி நேரம்தான் இருக்கிறது. அலா அப்துல் பத்தாஹ் உண்ணாவிரதம் அவரை மோசமாக பாதித்துளது. அவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் சிஓபி27 மாநாட்டின் மீது கறை படியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
யார் இந்த அலா அப்துல் பத்தாஹ்? – மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜனநாயக ஆட்சி ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. குறிப்பாக எகிப்து நாட்டில் இந்தக் குரல் காத்திரமாக ஒலித்தது. அதனால் எகிப்தின் நீண்ட கால அதிபராக இருந்த ஹோஸ்னி முபாராக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இருப்பினும் எகிப்தில் எதிர்பார்த்ததுபோல் ஜனநாயகம் மலரவில்லை. மாறாக, எல் சிஸியின் கீழ் மீண்டும் சர்வாதிகார ஆட்சியே அமைந்தது. அப்போதும் அப்துல் பத்தாஹ், அரசாங்கத்தை ஒருநாளும் விமர்சிக்காமல் இருந்ததில்லை. அவரது வலைப்பக்கம் இதனால் பிரபலமானது. 40 வயதான பத்தாஹ் இளைஞர்கள் மத்தியில் ஜனநாயக வேட்கையை ஆழமாக விதைகள் ஆக்கினார். இதனால் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளாகி அடிக்கடி சிறையின் கம்பிகளுக்கு பின்னால் சென்றுவிடுவார்.
அப்துலின் குடும்பத்தில் நிறைய சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் இருக்கின்றனர். அவரது தாய் லைலா சவுஃப் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கணக்குப் பேராசிரியர். அவரது தந்தை உரிமைகள் சார் வழக்கறிஞர். அவரது சகோதரிகள் அரசியல் செயற்பாட்டாளர்கள். கடந்த ஏப்ரல் மாதம் அப்துல் பத்தாஹ்வுக்கு அவரது தாயின் வழியாக பிரிட்டன் குடியுரிமை கிடைத்தது. இருந்தும் கூட சிறையில் இருக்கும் பத்தாஹை பிரிட்டன் தூதரகம் ரீதியாக மீட்க இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது அவரது குடும்பத்தாரின் குற்றச்சாட்டு.
அப்துல் பத்தாஹ் முதன்முதலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது, அனுமதியின்றி போராட்டத்தில் கலந்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2019ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அதே ஆண்டின் இறுதியில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அரசு எதிர்ப்புப் போராட்டங்களை தூண்டினார், சமூக வலைதளங்கள் வாயிலாக போலியான தகவல்களைப் பரப்பினார் என்றெல்லாம் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இதுதவிர 2013ல் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் ப்தர்ஹுட் என்ற அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, அவர் கடந்த 220 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தற்போது தண்ணீர் கூட பருகாமல் பிடிவாதம் காட்டி வருகிறார். இந்தச் சூழலில் அவரது விடுதலைக்கு உலக நாடுகள் பலவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
சகோதரியின் குரல்: பத்தாஹின் சகோதரி சனா சைஃப், பிரிட்டனில் இருந்து எகிப்துக்கு வந்துள்ளார். எகிப்தை அடைந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது சகோதரரின் வழக்கு மீது சர்வதேச ஊடக வெளிச்சத்தைப் பாய்ச்ச என்னால் இயன்ற முயற்சிகளை செய்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். எகிப்தில் ஜனநாயகம் தான் எனது சகோதரரின் கோரிக்கை. சிஓபி27 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கவுள்ளேன். ஞாயிறு இரவுக்குப் பின்னர் எனது சகோதரர் தண்ணீரும் அருந்தவில்லை” என்று தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்துல் பத்தாஹின் குடும்பத்தினருக்கு ரிஷி சுனக் ஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும். அதில் அவர், எகிப்தில் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் போது அந்நாட்டு அதிபர் எல் ஸிஸியிடம், இந்த விவகாரம் குறித்து பேசுவதாக உறுதியளித்துள்ளதாகவும் பத்தாஹ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்தக் கடித விவகாரத்தை பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகமும் உறுதி செய்தது. இந்தச் சூழலில் தான் ரிஷி சுனக், காலநிலை மாநாட்டில் மேடையில் ஏறிவிட்டு ஏதும் பேசாமல், காரணமும் கூறாமல் திரும்பினார். சுனக் மேடையில் பேச தயாரானபோது, அவரது உதவியாளர்கள் மேடைக்கு வந்து அவரிடம் ஏதோ கூறியுள்ளார். ஏறக்குறைய ஒரு நிமிடம் வரை உதவியாளர் ஒருவர் ஏதோ விவரிக்க சிறிது நேர தயக்கத்திற்குப் பின்னர் ரிஷி சுனக் அங்கிருந்து கிளம்பினார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தின் மனித உரிமைகள் அடக்குமுறை விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளது. அதேபோல், அலா அப்துல் பத்தாஹ் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுவாரா என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளது.