எதிர்கட்சியினர் எங்களை குறை சொல்வதை மட்டுமே வேலையாக வைத்துள்ளனர் என்றும், எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் பொம்மை போல் உள்ளார் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
”சென்னை முழுவதும் 247 கிலோமீட்டர் கால்வாய்களில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது 3, 778 பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை மின்ட் தங்கசாலை அருகே உள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுனர். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னையில் நீர் வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொசுவலைகளை வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி சார்பில் தற்போது தீவிர கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அமைச்சர் கே.என்.நேருவிற்கு இன்று 70 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் கே என் நேரு, மாநகராட்சி முழுவதும் நீர் வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கொசுவலைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. சேரும் சகதியும் அதிகமாக உள்ள இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. கால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை சரி செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
3778 பணியாளர்கள் மூலம் 120 விசை தெளிப்பான், 224 சிறிய கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம், 60 பெரிய வாகனங்களின் மூலம் கொசு மருந்து தெளிப்பு பணி நடைபெறுகிறது. சென்னை முழுவதும் 247 கிலோமீட்டர் கால்வாய்களில் தீவிரமாக கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். மற்றும் சென்னையில் டெங்கு பாதிப்பு எங்கும் இல்லை என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, எதிர்க்கட்சிகள் எங்களை குறை சொல்வதிலே கவனம் செலுத்துகின்றனர் என்றார். *தமிழக முதல்வர் தலையாட்டி பொம்மை போல் உள்ளார் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி தான் தஞ்சாவூர் பொம்மை போல் இருக்கிறார் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM