கலவை : கலவை அருகே ஏரி பகுதியில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் கலவை அடுத்த குப்பிடிசாத்தம் ஊராட்சியில் குடிநீருக்கு மூலாதாரமாக இருக்கும் ஏரியில் கோழி இறைச்சியை மாம்பாக்கம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கடைக்காரர்கள் இறைச்சி கழிவினை ஏரியில் கொட்டிச்செல்கின்றனர்.
மேலும் மழைக்காலம் தொடங்குவதால் ஏரியில் நீர் பாசனம் உயர்ந்துள்ளதால் இப்பகுதியில் உள்ள 750க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும். அதே போல் இப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் சமூக விரோதிள் இந்த ஏரியில் கோழி இறைச்சிகளை கொட்டுவதால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இதுபோல் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டும் கடைக்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.