பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று 3 நீதிபதிகளும், ஏற்புடையது அல்ல என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்துள்ளனர். இதற்கான எதிர்வினைகள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரே கூட்டணிக்குள் மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுவதை பார்த்திருக்கிறோம். ஒரே கட்சிக்குள் அப்படி வந்து பார்த்திருக்கிறீர்களா?
வேறு எந்த கட்சியில் நடக்கிறதோ, இல்லையோ? எங்கள் கட்சியில் அப்படிப்பட்ட சூழலை பார்க்கலாம் என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டே வருகின்றனர்
காங்கிரஸ்
கட்சியினர். EWS இடஒதுக்கீட்டு வழக்கில் வடக்கு வரவேற்கிறது, தெற்கு எதிர்க்கிறது என்று சொல்லும் அளவிற்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரவேற்றுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 103வது திருத்தம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது அல்ல. இந்த தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது. இதற்கான அடிப்படை பணிகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதே 2005-06ல் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சின்ஹோ ஆணையம் அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பெறப்பட்டன. 2014ல் மசோதாவாக தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் படேலும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இதேநிலைப்பாட்டை தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் தெரிவித்துள்ளது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சமூக நீதி என்பது மனித குலத்திற்கே பொதுவானது. எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. 10 சதவீத இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, இடஒதுக்கீடு சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, சம வாய்ப்புகளை உருவாக்கவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. சமூக ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைப்பது. இடஒதுக்கீட்டு கொள்கையை நீர்த்துப் போகச் செய்வது என்று தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கு பெயர் போன தமிழக மண்ணில் இருந்தே மாறுபட்ட கருத்துகள் எழுவது சலசலப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் ஆளும் திமுக அரசு கடுமையாக எதிர்த்து சட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறது. இதெல்லாம் வரும் 2024 மக்களவை தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தாதா? கூட்டணி நிலைப்பாடு என்னவாகும்? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இதேபோல் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், EWS வரம்புகள் சரியாக இல்லை.
தீர்ப்பிலும் முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த தீர்ப்பால் உண்மையான பொருளாதார அல்லது சமூக முன்னேற்றம் சாத்தியமல்ல என்று மழுப்பலான கருத்தை முன்வைத்துள்ளார். டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் கூறுகையில், இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் மேல்தட்டு மனநிலையை காட்டுவதாக கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக காங்கிரஸின் நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.