இந்தியாவில் இந்த வாரம் முடிந்த நவ.4 முதல், வரும் டிசம்பர் மாதத்தின் 14ம் தேதி வரை மட்டும் சுமார் 32 லட்ச திருமணங்கள் நடக்க இருப்பதாகவும், அதனால் இந்தியாவின் வர்த்தகம் ரூ.3.75 லட்சம் கோடி அளவுக்கு உயர்வதாகவும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவால் இந்தியா முழுக்க சுமார் 35 நகரங்களில் 4,302 வர்த்தகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இந்த வருவாய் விவரம் தெரியவந்திருப்பதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ப்ரவீன் பேசியிருக்கும் தகவலின்படி, “டெல்லியில் மட்டுமே நவ.4 – டிச.14 வரை 3.5 லட்சத்துக்கு மேலாக கல்யாணங்கள் நடக்கவுள்ளன. களைகட்டும் இந்த கல்யாண சீசனில், அதன்காரணமாக டெல்லியில் மட்டும் ரூ.75,000 கோடி வர்த்தகம் நடக்கவுள்ளது.
கடந்த வருடம், இதே நேரத்தில் சுமார் 25 லட்ச திருமணங்களே நடந்திருந்தன. அவற்றின் மூலம் ரூ.3 லட்சம் கோடி வரை மட்டுமே வருமானம் கிடைக்குமென அப்போது எதிர்பார்க்கப்பட்டது. இவ்வருடம், ரூ.3.75 லட்சம் கோடி வருமானம் ஈட்டும் அளவுக்கு நிலை அதிகரித்துள்ளது. அடுத்தகட்டமாக, கல்யாண சீசன் ஜன. 14 முதல் ஜூலை 2023 வரை தொடரக்கூடும். அப்போது வர்த்தகம் இன்னும்கூட உயரலாம்” என்றுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM