பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கும் படி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராகுல்காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘கேஜிஎஃப்-2’ படத்தின் பாடல் இசை அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாக இசைநிறுவனம் ஒன்று பதிந்த காப்புரிமை மீறல் வழக்கில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
எம்ஆர்டி இசைநிறுனத்தை நிர்வகித்து வரும் எம் நவீன்குமார் என்பவர் கடந்த மாதத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரை கர்நாடகாவில் நடைபெற்ற போது, அதில் அனுமதி இல்லாமல் மாபெரும் கன்னட வெற்றிப்படமான ‘கேஜிஎஃப்-2’ படத்தின் இசை பயன்படுத்தப்பட்டது என்றும், இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகிய மூன்று பேர் மீது புகார் அளித்திருந்து வழக்கு தொடுத்திருந்தார்.
தனது புகாரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்பான இரண்டு வீடியோக்களில் ‘கேஜிஎஃப்-2’ படத்தின் இசை முன்அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நவீன்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வழக்கினை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், தற்காலிகமாக இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து பதிவுகளை கையாளும் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை முடக்க உத்தரவிட்டது. தனது உத்தரவில் இசைநிறுவனம், காப்புரிமை பெற்ற உண்மையான இசையும், அதன் பதிப்புரிமை மீறப்பட்ட காப்பி அடங்கிய குறுந்தகட்டை சமர்ப்பித்திருந்தது. இசை நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஆவணம் ஆழமான காயத்தை ஏற்படுத்த உள்ளதையும், பைரசியை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்த சமூக வலைதள பக்கம் குறித்து பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து சமூக வலைதளங்களில் தான் படித்து தெரிந்து கொண்டோம். நீதிமன்ற உத்தரவு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை, உத்தரவின் நகலும் இன்னும் கிடைக்கவில்லை. இதுகுறித்த சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் கடைபிடிப்போம்” என்று கூறியுள்ளது.
முன்னதாக, பெங்களூரு, யஸ்வந்த்புரத்தில் உள்ள காவல் நிலையத்தில், இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘கேஜிஎஃப்-2’ படத்தின் இசை முன்அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பயன்படுத்த பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி, கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
We have read on social media about an adverse order from a Bengaluru court against INC & BJY SM handles.
We were neither made aware of nor present at court proceedings. No copy of the order has been received.
We are pursuing all the legal remedies at our disposal.
— Congress (@INCIndia) November 7, 2022