அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 2017ம் ஆண்டுக்கு பின்னர் பாஜகவுக்கு தாவிய 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மீண்டும் சீட் கேட்டு நச்சரிப்பதால் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குஜராத்தில் வரும் டிச. 1, 5ம் தேதிகளில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இவற்றில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்பி, எம்எல்ஏ, மூத்த நிர்வாகிகள் பலர் பாஜகவில் சீட் கேட்டு முட்டிமோதி வருகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், ராஜ்யசபா தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் அக்கட்சியில் இருந்து வெளியேறினர். கடந்த 2017ம் ஆண்டு முதல், 16 எம்எல்ஏக்கள் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்களில் சிலர் தற்போதைய பாஜக அரசில் அமைச்சர்களாக உள்ளனர். குஜராத் படேல் சமூகத்திற்காக போராடி தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்ட ஹர்திக் படேல், சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். அவர் விராம்கம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல் சாதிய ஒதுக்கீடுகாக போராடிய அல்பேஷ் தாக்கூர் என்பவரும் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அவரும் இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இவ்வாறாக பாஜக சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த 2017 தேர்தலுக்கு பின்னர் 35க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், பாஜகவில் சீட்டு கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இறுதிப் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்களால் சீட் கொடுப்பதில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. ஒருவேளை அவர்களுக்கு எம்எல்ஏ சீட் கொடுக்கப்படவில்லை என்றால், தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே பாஜகவின் மூத்த தலைவர்களான முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் உள்ளிட்டோருக்கு இந்த தேர்தலில் சீட் இல்லை என்று கூறப்படுகிறது.