அன்காரா: உலகின் உயரமான பெண்ணாக அறியப்படும் ருமேசா கெல்கி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.
உயரமான மனிதர்களுக்கு அன்றாட வாழ்வில் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட கடினமானதாக மாறலாம். பேருந்து, ரயில், விமானம் என அவர்களது பயணங்கள் சிரமத்துக்குள்ளானதாகவே அமைவதை நாமும் பார்த்திருப்போம். அதே சிரமத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தவர்தான் துருக்கியின் ருமேசா கெல்கி. உலகின் உயரமான பெண்ணாக அறியப்படுகிறார் துருக்கியின் ருமேசா கெல்கி .இவரது உயரம் 7 அடி 7 அங்குலம்.
தனது உயரம் காரணமாக ருமேசா வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், துருக்கியை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று ருமேசா கெல்கிக்காக தங்களது விமானத்தில் மாற்றம் செய்து ஆறு இருக்கைகள் இருந்த இடத்தில் படுக்கை ஒன்றை அமைத்து ருமேசா கெல்கியை விமானத்தில் பயணம் செய்ய வைத்திருக்கிறது. இதன் மூலம், 13 நேர பயணத்திற்குப் பிறகு துருக்கியிலிருந்து அமெரிக்காவுக்கு ருமேசா கெல்கி சென்றடைந்திருக்கிறார்.
தனது முதல் விமானப் பயணம் குறித்து ருமேசா கெல்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஆரம்பம் முதல் முடிவு வரை குறையற்ற பயணமாக இது அமைந்தது. இது எனது முதல் விமானம், ஆனால், இது நிச்சயமாக கடைசி விமானப் பயணமாக இருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
25 வயதான ருமேசா கெல்கி அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியவுள்ளார். தனது வேலைக்காக இந்தப் பயணத்தை ருமேசா கெல்கி மேற்கொண்டிருக்கிறார்.