பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 7-11-2022 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 12ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக, வருகின்ற 12-11-2022 (சனிக்கிழமை) அன்று காலை 10-30 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.