இந்தியாவில் சந்திர கிரகணம் இன்று (நவம்பர் 8) மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரகிரகணத்தை மக்கள் கண்டுகளிக்க ஜவாகா்லால் நேரு கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது. கோளரங்க வளாகத்தில் இன்று மாலை 4 மணி முதல் மாலை 6.30 மணி வரை சந்திரகிரகணத்தைக் காண ஏராளமான தொலைநோக்கிகள் வைக்கப்பட்டிருக்கும்.
சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி மற்றும் தமிழகத்தில் பல கோயில்களில் நடை அடைக்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. சந்திரகிரகணத்துக்குப் பின்னர் கோவில் சுத்தம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறக்கப்படும்.
தி.நகர் திருமலை தேவஸ்தானத்தில் வழக்கமாக காலை 8.30 மணி முதல் இரவு 7.20 மணி வரை நடை சாத்தப்படுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை சாத்தப்படும். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை காலை 9 மணி முதல் இரவு 7.30 வரை சாத்தப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் காலை 6.45 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பகல் 12.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலவர் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
இதேபோல் பல கோயில்களில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு குறிப்பிட்ட நேரம் நடை சாத்தப்படுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வழக்கம் போல திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.