சுவிஸ் ட்ராம்களில் புதிதாக செய்யப்பட்டுள்ள ஒரு விளம்பரம் காண்போரை முகம் சுளிக்கவைத்துள்ளது.
அது தற்கொலை தொடர்பான ஒரு விளம்பரம் என்பதுதான் மக்களை முகம் சுளிக்கவைத்துள்ளதற்கான காரணம்.
நீண்டகால உடல்நல பாதிப்பு மற்றும் கடுமையான வலி முதலான காரணங்களுக்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பும் பலர் சுவிட்சர்லாந்துக்கு வருவதைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம்.
Exit என்னும் அமைப்பு, அப்படி தீரா உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவி செய்கிறது. அதாவது, அவர்கள் சட்டப்படி மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள, அல்லது சுயவிருப்பத்துடன் கருணைக்கொலை செய்யப்பட உதவுகிறது.
தற்போது இந்த அமைப்பு ட்ராம்களில் விளம்பரங்கள் செய்ய திட்டமிட்டுள்ளது.
இருந்தாலும், காலையில் ஆயிரம் பிரச்சினைகளுடன் வேலைக்குச் செல்லும் நேரத்தில், அல்லது பகலெல்லாம் வேலை செய்து சோர்வாக வீடு திரும்பும் நேரத்தில், ’நீங்கள் தற்கொலை செய்துகொள்ள நாங்கள் உதவுகிறோம்’ என்ற வாசகம் நாம் பயணிக்கும் போக்குவரத்து வாகனத்தில் எழுதப்பட்டிருந்தால், அதைப் பார்ப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?
ஒரே ஆறுதல் என்னவென்றால், நேரடியாக, தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறீர்களா? எங்களை அணுகுங்கள் என்றெல்லாம் எழுதாமல், ஜேர்மன் மொழியில் Exit என்ற ஒரு வார்த்தையைப் போட்டு, அது குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்காக கைப்பிரதிகளும் ஒரு ஹோல்டரில் வைக்கப்பட இருப்பதாக திட்டம்.
இந்த சர்ச்சைக்குரிய விளம்பரம் மக்களை முகம் சுளிக்கவைத்துள்ள நிலையில், இது பிரச்சாரம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட விளம்பரம் அல்ல, மக்களுக்கு தகவலளிப்பதற்காக செய்யப்படும் விளம்பரம் மட்டுமே என்கிறது Exit அமைப்பு.
அடுத்த இரண்டு வாரங்களில் இந்த விளம்பரங்கள் Bern, பேசல் மற்றும் சூரிச் மாகாணங்களில் இயங்கும் ட்ராம்களில் ஒட்டப்பட உள்ளன.