கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை நூற்பாலையில் உள்ள கம்ப்ரஸர் பழுதானது.
இதனால் கம்ப்ரஸரை விநியோகித்த நிறுவனத்துக்கு மில் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். பழுதை சரிசெய்வதற்காக கம்ப்ரஸர் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இன்ஜினீயரான கோமதி சங்கர் (41) மற்றும் அவருடைய உதவியாளர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோமதி சங்கர் கம்ப்ரஸர் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கம்ப்ரஸர் வெடித்துச் சிதறியது. இதில் கோமதி சங்கர் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கோமதி சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.