சென்னை: சென்னையில் 2 நாட்களில் மழைநீர் வடிகால்களில் இருந்து 2,000 கிலோ வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளன.
சென்னையில் அடுத்த கனமழை வரும் 10-ம் தேதி பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 10-ம் தேதிக்குள் பல்வேறு பணிகளை முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
புதிதாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ள இடங்களில் முடிக்கப்படாத வண்டல் வடிகட்டி தொட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகளில் சேர்ந்துள்ள வண்டல்களை அகற்ற வேண்டும். வண்டல் வடிகட்டி தொட்டி மற்றும் மழைநீர் வடிகாலுடன் இணைக்கும் குழாய் பொருத்தப்படாத இடங்களில் குழாய் பொருத்த வேண்டும். குழாய் பொருத்த முடியாவிட்டால் தற்காலிக ஏற்பாடாக துளை இட வேண்டும். வண்டல் வடிகட்டி தொட்டிகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். சாலைகளில் எற்பட்டுள்ள சிறு பள்ளங்களை உடனடியாக சீர்செய்ய வேண்டும். சாலை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். மழையின் நிறுத்தப்பட்ட மழைநீர் வடிகால் இணைப்புகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி சென்னையில் கடந்த 2 நாட்களில் 2,000 கிலோ வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளன. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் மழை நின்றவுடன் 1,312 கி.மீ., நீளம் உள்ள வடிகால்களில் 1,280 கி.மீ., துார்வாரப்பட்டு உள்ளது. வட சென்னையில் உள்ள பிரதான கால்வாய்களில் துார்வாரப்பட்டு, தடையின்றி மழைநீர் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 85 லட்சம் கிலோ கழிவுகளை அகற்றப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் மட்டும் 2,000 கிலோவுக்கு மேல் வண்டல்களை மாநகராட்சி அகற்றியுள்ளது. மழைநீர் வடிகாலுக்கான வண்டல் வடிகட்டி தொட்டி 22,996 உள்ளன. அவற்றில் 18,734 இடங்களில் துார்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள 4,262 வடிகட்டி தொட்டிகள் துார்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று அவர்கள் கூறினர்.