சேலம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில், ரூ.5,00,000 பேரம் பேசி இளம்பெண்ணின் உறவினர் வளர்மதி, அவர் கணவர் மதியழகன் மூலம் விற்பனை செய்யப்படுவதற்காக குழந்தை சேலம் எடுத்துவரப்பட்டிருக்கிறது. குழந்தையை வாங்குவதற்கு ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர் லதா, சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்திருக்கிறார்.
இது தொடர்பாக ஏற்கெனவே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் காவல்துறையினர் சாதாரண உடையில் அந்தப் பகுதியில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வளர்மதி, அவர் கணவர் மதியழகன், குழந்தையை வாங்கிச் செல்ல வந்த இடைத்தரகர் லதா ஆகிய மூவரையும் போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து பிறந்து நான்கு நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து குழந்தைகள் நலக் காப்பகத்துக்கு குழந்தை பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டது.
குழந்தையை விற்க-வாங்க முயன்ற மூவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இடைத்தரகர் லதா குழந்தைக் கடத்தல்-விற்பனை மட்டுமின்றி, சட்டவிரோத கருமுட்டை விற்பனையிலும் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.