ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது அரையிறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் பாகிஸ்தான் அணி மோதவுள்ள நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணியுடனான போட்டி வியாழக்கிழமை அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
தொடக்கம் முதலே இந்திய பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இறங்க வேண்டுமா, அனுபவசாலியான தினேஷ் கார்த்திக் இறங்க வேண்டுமா என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. தினேஷ் கார்த்திக் அவுட் ஆஃப் பார்மிலுள்ள நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு ஜிம்பாப்வே போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்து இங்கிலாந்துடன் நடக்கவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் யாரைக் களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “தினேஷ் கார்த்திக் ஒரு திறமையான வீரர். ஆனால் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் என்று வரும்போது, அவர்களின் தாக்குதலைப் பார்க்கும்போது, உங்களுக்கு ஒரு வலுவான இடது கை ஆட்டக்காரர் தேவை என்று நினைக்கிறேன்.
இந்திய அணியில் ஒரு மேட்ச் வின்னராக யார் அதைச் செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். எனவே இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை களம் இறக்க வேண்டும். ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறார் என்பது மற்றும் இதற்குக் காரணம் கிடையாது. அவர் நிச்சயம் நன்றாக விளையாடி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வார்” என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? ரிஷப் பண்ட் – தினேஷ் கார்த்திக் – யாரை இந்திய அணி களமிறக்க வேண்டும்?