மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்பொழுது மதுரையில் பெண்கள் கல்லூரி முன்பு நடைபெற்ற சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை “மதுரையில் நடந்த சம்பவம் குறித்தான பதபதைக்கும் வீடியோ காட்சி பார்த்தேன். அந்த வீடியோவில் உள்ள நபர்களை பார்த்தாலே தெரிந்திருக்கும் தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் எந்த அளவிற்கு அதிகமாகிவிட்டது என்று. பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பள்ளி மாணவிகளே பேருந்துகளில் பீர் பாட்டில்களை எடுத்துச் செல்லும் நிகழ்வை நாம் பார்த்துள்ளோம். இந்த நிகழ்வு எல்லாம் கடந்த ஒரு வருடங்களில் நடைபெறுகிறது. கட்டுக்கோப்பாக இருந்த தமிழக இளைஞர்களை மதுவும் கஞ்சாவும் இப்பொழுது சீரழித்துக் கொண்டிருக்கிறது. மேலும் காவல்துறையினரின் கைகளை கட்டிப்போட்டு வைத்துள்ளனர். முன்பெல்லாம் ரோட்டில் சுற்றி தெரியும் பொழுது காவல்துறையினர் லத்தியால் அடிப்பார்கள் அப்பொழுது போலீசார் மீது ஒரு பயம் இருந்தது.
தமிழகத்தில் மதுவையும் கஞ்சாவையும் ஒழித்தால் தான் இளைஞர்கள் சமுதாயத்தோடு ஒன்றி வருவார்கள். தற்பொழுது மதுவால் இளைஞர்கள் வேறு சமுதாய வேறு என்ற நிலையில் தற்போது இருப்பது வருத்தம் அளிக்கிறது. தவறு செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்வது, இடமாற்றம் செய்வது, உள்ளூர் அரசியல்வாதிகள் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்களை நிறுத்த வேண்டும். காவல்துறையை சீரழிந்தால் சமுதாயமும் சீரழியும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்தார்.