தூத்துக்குடி ஆழ்வார் திருநகரியில் கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக காரில் கடத்தப்பட்ட பள்ளி ஆசிரியையின் கணவர் விருதுநகர் அருகே சூலக்கரையில் மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர்கள் குருஸ் அலெக்சாண்டர் – பிரான்சிஸ் விண்ணரசி தம்பதியர். பிரான்சிஸ் விண்ணரசி ஆழ்வார் திருநகரி வேலன் காலனியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பிரான்சிஸ் விண்ணரசி பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்துள்ளது. இதையடுத்து தனது கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சுமார் ஐந்து மணி அளவில் கணவர் குருஸ் அலெக்சாண்டருக்கு போன் செய்துள்ளார். அப்போது பேசிய குருஸ் அலெக்சாண்டர், தான் ஒரு பிரச்னையில் மாட்டியுள்ளதாகவும், 25 பவுன் நகை கொண்டுவந்தால்தான் விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரான்சிஸ் விண்ணரசி ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குருஸ் அலெக்சாண்டர் ஒரு இன்னோவோ காரில் கடத்தப்பட்டதாக ஆழ்வார் திருநகரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த இன்னோவா காரை விருதுநகர் நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீசார் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த கல்யாண் குமார் என்பவரிடம் குருஸ் அலெக்சாண்டர் 13.09.2020 அன்று 21 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக அவரை கடத்தி மிரட்டி அவரது குடும்பத்தினரிடம் பணத்தை திரும்பப் பெற திட்டமிட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து குருஸ் அலெக்சாண்டர் மற்றும் ஓட்டுநர் அகம்மது அக்ரம், கல்யாண் குமார், கூல் பாண்டி ஆகியோரை ஆழ்வார் திருநகரி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM