தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது நிர்வாக வரம்புகளை மீறி அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் கருத்து சொல்கிறார் என்பது தான் பிரச்சினை. இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதில் தலையை நுழைத்த தமிழிசை சவுந்திரராஜனால் மோதல் வேறுவிதமாக மாறியிருக்கிறது. வீட்டில் தெலுங்கு பேசிக் கொண்டு, வெளியில் தமிழ்ப் பற்று இருப்பதாக வேஷமிடும் தெலுங்கர்கள் என்று கலைஞர்
குடும்பத்தை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு முரசொலி மீண்டும் பதிலடி கொடுக்க சலசலப்பு தொடர் கதையாகி மாறியிருக்கிறது. இன்றைய தினம் சிலந்தி பகுதியில் “பொய்மான் ஆக வேண்டாம் தமிழ்வசை?” என்ற பெயரில் தமிழிசை சவுந்திரராஜனை விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், யார் தெலுங்கில் பேசுகிறார்கள் என்று அவரால் நிரூபிக்க முடியுமா? நான் விரைவில் தெலுங்கில் பேசுவேன் என்று தெலங்கானாவில் ஆளுநராக பதவியேற்கும் போது ‘மாட்லாடியது’ மறந்து போச்சா?
தமிழிசையின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியவர் தமிழினத் தலைவர் கலைஞர். தமிழிலா – தெலங்கிலா எதில் வாழ்த்தினார் கலைஞர்? ஆகஸ்ட் 19ஆம் தேதி கோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்கு முன்பு இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்கு வழிபாடு செய்ய தமிழிசை வந்திருந்தார். அப்போது அரை நூற்றாண்டு கால தமிழகத்தின் தமிழினத்தின் தாய் வீடான கலைஞரின் இல்லத்திற்கு சென்றார்.
செல்வி அவர்கள் தமிழிசையை அன்போடு அழைத்து சென்றாரே, தெலுங்கிலா வரவேற்றார்? உள்ளத்தால் பொய் சொல்லி வாழ்ந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எத்தனையோ தமிழ்ப் பாட்டுகள் சொல்லி இருக்கின்றன. கலைஞர் அவர்கள் மறைவின் போது மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு, வானமே மங்கி இருக்கிறது. ஏனெனில் ஒரு தமிழ்ச் சூரியன் மறைந்திருக்கிறது என்று சொன்ன தமிழிசை இன்று தமிழ் வசையாக ஆனது.
எதற்காக இதெல்லாம்? தெலங்கானாவில் அவருக்கும் மாநில முதல்வர் சந்திரசேகர் ராவிற்கும் இடையில் பிரச்சினை இருக்கலாம். அதனால் அங்கு இருக்க முடியாமல் போகலாம். புதுவையில் கூட சிக்கல் இருக்கலாம். இதனால் பதவி விலகி விட்டு தமிழகத்திற்கு வந்து அரசியல் நடத்தலாம். அதை விட்டு விட்டு வேறு மாநில ஆளுநராக இருந்து கொண்டு இங்கு அரசியல் நடத்தக் கூடாது.
அது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. Shamsher Singh vs State of Punjab (1975) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மாநில அரசின் சுருக்கெழுத்தாளர் ஆளுநர் எனக் கூறப்பட்டுள்ளது. அது தமிழிசை சவுந்திரராஜனுக்கும் பொருந்தும். இத்தகைய சூழலில் தமிழக ஆளுநருக்கு இவர் Shorthand Expression ஆக நினைக்கிறாரா? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.